தினமலர் முதல் பக்கம் » கோர்ட் செய்தி »தமிழ்நாடு
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2010,23:13 ISTமதுரை : தஞ்சை பெரிய கோவிலுக்குள் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுப்பதற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு தலைவர் முருகேசன் தாக்கல் செய்த பொது நல வழக்கு:
தஞ்சை பெரிய கோவிலை, உலக புராதன சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. இக்கோவிலை முதலாம் ராஜராஜ சோழன் கட்டினார். இங்கு எழுந்தருளியுள்ள பிரகதீஸ்வரர் சுவாமியை ஏராளமானோர் வழிபடுகின்றனர். கோவில் விமானம் 216 அடி உயரம் கொண்டது. இதை, பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா செப்., 25, 26ம் தேதிகளில் நடக்கவுள்ளது. இதற்காக பணிகள் நடந்து வருகின்றன.
கோவில் வளாகத்திற்குள் சுவாமி சன்னிதியிலிருந்து வெளியில் செல்லும் வழியில் ராஜகோபுரம் அருகே போர்வெல் அமைக்கப்படுகிறது. 400 அடி வரை போர்வெல் அமைக்கின்றனர். இதற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவில் களிமண் ஏரியாவில் அமைந்துள்ளது. போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்தால், அடித்தளம் பாதிக்கப்பட்டு, கோபுரத்தில் விரிசல் ஏற்படும்.
ஏற்கனவே காளஹஸ்தி கோவில் கோபுரம் இடித்து விழுந்துள்ளது. ஸ்ரீரங்கம் பெரிய கோவில், மதுரை மீனாட்சி கோவில் கோபுரங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு, கோபுரம் அருகே போர்வெல் அமைத்தது காரணம்.
தஞ்சை கோவிலுக்குள் போர்வெல் அமைக்கும் முன், அறிவியல் ரீதியாக ஆய்வு நடத்தவில்லை; நிபுணர் குழு அமைக்கப்படவில்லை. போர்வெல் அமைப்பதை நிறுத்தக் கோரி, முதல்வர் உட்பட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. போர்வெல் அமைக்கும் பணிக்கும், தண்ணீர் எடுக்கவும் தடை விதிக்க வேண்டும்; போர்வெல்லை மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் வக்கீல்கள் லஜபதிராய், அருணாச்சலம் ஆஜராயினர்.
நீதிபதிகள் முருகேசன், துரைசாமி கொண்ட பெஞ்ச், போர்வெல் அமைத்து தண்ணீர் எடுக்க இடைக்கால தடை விதித்தது. மனு குறித்து பதிலளிக்க தொல்லியல் துறை, இந்து அறநிலையத் துறை, தஞ்சை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது
thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=70953

No comments:
Post a Comment